கடலும், கடல் சார் வாழ்வுமே மீனவர்களின் உயிர்வாழ்வில் தங்கி நிற்கிறது. உலகமயமாக்கலின் பின்விளைவுகளாய் மீனவப் பழங்குடிகள் இன்று கடற்புரங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு சமவெளிப் பகுதிகளுக்குள் வீசப்படுகிறார்கள். தண்ணீரில் இருந்து எடுத்து வீசப்படும் மீன் குஞ்சுகள் மூச்சு திணறிச் சாவது போல அவர்கள் வேர்களை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறார்கள். சுற்றுலா வளர்ச்சியின் பெயராலும், கடற்கரை மேலாண்மைத் திட்டத்தின் பெயராலும், பன்னாட்டு ஏகபோக மீன்பிடி உரிமையாலும் அவர்களின் வாழ்வு நசுங்கி நாசமாகிறது. பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரியின் கேரள எல்லையான நீரோடி வரை சுமார் 1,062 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிழக்கு கடற்கரையோரமாக வாழும் இம்மக்கள் வங்காள விரிகுடாவையும், அரபிக்கடலையும் அண்டி வாழ்கிறார்கள். புவியியல் ரீதியாக ஒரமாக ஒடுக்கப்பட்டு சமவெளிச் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட இம்மக்கள் தமிழக அரசியலில் தீர்க்கமான சக்திகளாகவோ செல்வாக்கு செலுத்தும் சக்திகளாகவோ வளரவில்லை. வளர அனுமதிக்கப்பட்டதும் இல்லை
.
பழவேற்காடு, சென்னை, மாமல்லபுரம், கடலூர், பாண்டிச்சேரி, சிதம்பரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, இராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என இந்துக் கதையாடலில் புனிதத் தல ஒளிவட்டங்கள் இவ்வூர்களுக்கு இருந்தாலும் கூட இந்த நகரங்களின் பூர்வகுடிகள் மீனவப் பழங்குடிகளே. சென்னையின் வயது 300 என்கிறார்கள். அப்படியானால் அதற்கு முன் சென்னைக்கு வரலாறே கிடையாதா? பெரும் கோடீஸ்வரப் பண்ணைகளின் சொர்க்கமாகிப் போன சென்னையின் வயது 300 என்றால் அதன் அர்த்தம் என்ன? உங்கள் பாட்டனும் முப்பாட்டனும் வருவதற்கு முன்னால் சென்னை ஒரு மீனவ கிராமம். காலமாற்றத்தில் அது செயற்கைத் துறைமுக நகரமாக மாறிப் போனதோடு. வலைகள் காய்வதாலும், மீன்கள் கருவாடாக மாறுவதாலும் மெரீனாவின் அழகு கெடுகிறது என்று மீனவர்களைச் சுட்டுக் கொன்ற வரலாறுகள் கூட உண்டு. எழில் மிகு சென்னையின் அழகிற்குப் பின்னால் இரத்தம் தோய்ந்த மீனவர்களின் அழுகுரல் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை வாழ்கிற மீனவ மக்களில் பட்டினவர், பரதவர், முக்குவர் என பாரம்பரியமாக கடலை நம்பி வாழ்கிற மீனவர்கள் அதிகமாக உள்ளனர். தவிர மரக்காயர், முத்தரையர், கரையர், கடையர் போன்ற பாரம்பரிய மீன்பிடி சமூகங்களும் தமிழகக் கடற்கரை பிரதேசங்களில் வாழ்கின்றனர். சென்னைக்கு வந்த பண்ணைகள் எப்படி பூர்வீக மீனவர்களை அப்புறப்படுத்தி சென்னையை அழகுபடுத்திக்(?) கொண்டார்களோ அது போலவே, இராமேஸ்வரமும் பாரம்பரிய மீனவர்கள் துரத்தப்பட்ட ஒரு தீவாக மாறிவிட்டது. அங்கே இன்று செல்வாக்கு செலுத்துகிறவர்கள் முக்குலத்தோர். இராமநாதஸ்வாமி கோவிலை முன்வைத்து இந்து மதவெறிக் கும்பல்களான ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற இந்துப் பாசிஸ்டுகள் இவ்வூர்களில் செல்வாக்கு செலுத்துவதும் அவர்களுக்கு அடியாள் வேலை பார்ப்பதும் இதே முக்குலத்தோர்தான். அது போல பாரம்பரிய மீனவர்களின் செழிப்பான நகரமாக இருந்தது தூத்துக்குடி. இன்றைக்கு மீனவர்களை தூத்துக்குடியில் இருந்து பீஸ் பிடுங்கி வீசி எரிந்து விட்டு தூத்துக்குடி நகரமே தங்களுக்கானது என்று அதிகார பலத்தோடு அமர்ந்திருப்பது நாடார்கள். கன்னியாகுமரியிலும் இதே நிலைதான். கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திரம், பகவதியம்மன் கோவிலை மையமிட்டு எழுப்பப்பட்டிருக்கும் இந்துப் பாசிசம், திருச்செந்தூரில் முருகன் கோவிலை முன்வைத்து உள்ளது. இந்த அமைப்புகளின் அடியாட்களாக செயல்படுவதும் இதே பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள்தான். இந்தப் பகுதிகளில் எல்லாம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளை அண்டியே பாரம்பரிய மீனவர்கள் வாழ வேண்டிய நிலை. தவிரவும் தமிழகத்தில் கடற்கரையோர சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் எந்த சாதி செல்வாக்கானதோ பெரும்பான்மையானதோ அந்தச் சாதிகளைச் சார்ந்தவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தி வருகின்றன
திராவிடக் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஏனைய தேசியக் கட்சிகளும். சமவெளிச் சமூகங்களின் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிற இந்த வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் ஓட்டு மட்டும் போடும் வாக்குப் பிண்டங்களாக மட்டுமே மீனவ மக்கள் திராவிடக் கட்சிகளால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். அரசியலில் சமவெளிச் சமூகங்களின் பிரதிநிதிகளே மீனவ மக்களின் தலைவர்களாக இருக்கிறார்கள். இராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் விசைப்படகு உரிமையாளர்களாகவும் இவர்களே இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தென் தமிழக கடலோரங்கள் மட்டுமல்லாது கடற்கரை சமூகங்களில் செல்வாக்கு செலுத்தும் கிறிஸ்தவம் கூட இம்மக்களை இன்று வரை காயடித்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் பங்குப் பாதிரியார்கள் தேவாலயங்களில் குறிப்பிட்ட ஒரு திராவிடக் கட்சியின் பெயரைச் சொல்லி பகிரங்கமாகவே தேவாலயப் பூஜையில் ஓட்டு கேட்கிறார்கள். இந்தியத் திருச்சபை இந்துத் தன்மையாக மாறி காலங்கள் ஓடி விட்டாலும் உள்ளூரில் மீனவ மக்களை நசுக்குவது பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதி பாதிரியார்களே. மறைமவாட்டங்களில் மீனவ மக்களின் பங்களிப்புக்கும் வாய்ப்புகளுக்கும் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி பாதிரிகள் எதிராக இருக்கிறார்கள். தற்காலத்தில் ஒடுக்கப்பட்ட மீனவப் பாதிரிகள் விழிப்புணர்வடைந்து மறைமாவட்ட தலைமைகளில் உரிமைகள் கோரும் போது அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சாதி திருச்சபை கோட்டாறு மறைவாட்டத்தையே இரண்டாகப் பிரிக்கும் நிர்வாக முடிவை எடுத்திருக்கிறது. பாதிரியார்களுக்கே இதுதான் நிலை என்றால் உழைக்கும் மீனவ மக்களின் நிலையை நீங்கள் யோசித்துப் பாருங்கள்.
பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட சாதிகளும், ஆதிக்க சாதிகளுமே கோலோச்சும் தேசிய இயக்க, திராவிட இயக்க அரசியல் அதிகாரத்தில் மீனவர்கள் அரசியல் சக்திகளாக பலம் பெறாமல் போனதும் சமவெளிச் சமூகங்களில் இருந்து கடற்கரை மக்களுக்குள் ஊடுருவியிருக்கும் சுரண்டல் பேர்வழிகள் மீனவர்களின் உரிமை குறித்துப் பேசுவதுமே இராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்சனை ஒரு பெரிய அளவிலான மீனவர் பிரச்சனையாக வெடிக்காமல் போனதற்குக் காரணம். மீனவர் உரிமை பற்றிப் பேசுகிற இவர்கள் உண்மையான மீனவ மக்களின் வலிகளையும் வேதனைகளையும் அறியாதவர்களாக இல்லை. மாறாக காலங்காலமாக கடலில் இருந்து கொண்டு வரும் மீனுக்கு கரையில் இருந்தபடியே விலை நிர்ணயம் செய்து அதன் மூலம் கொழுத்த லாபம் பார்த்தவர்கள் இவர்கள். இன்றுவரை உடலுழைப்பில் ஈடுபடாமல் கரையில் அமர்ந்தபடியே உழைப்பைச் சுரண்டி வரும் இவர்கள் மீனவர் உரிமை தொடர்பாக பேசுவது எவ்வளவு அபத்தம்! சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் வந்தபோது, ஒரு பக்கம் சேதுக் கால்வாய் திட்டம் வந்தால் தமிழன் மல்லாக்கப் படுத்துக் கிடந்தபடியே உண்டு வாழலாம் என்றும் தமிழகம் சிங்கப்பூராக மாறிவிடும் என்றும் பேசிய மரபார்ந்த தமிழ்க் குரல் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் ராமன் பாலத்தை இடித்தால் நாடே சுடுகாடாக மாறிவிடும் என்று கூச்சலிட்ட இந்துப் பாசிசக் குரல் மறுபக்கம். ஆனால் இந்த இரண்டுக்குமிடையே மீனவர் நோக்கில் அவர்களது மரபார்ந்த மீன் பிடித் தொழிலில் இந்த சேதுக்கால்வாய் திட்டம் ஏற்படுத்தப் போகும் நாசகார அழிவு குறித்தோ, அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பவளப்பறைகள் குறித்தோ ஏன் எந்த சக்திகளும் பேசவில்லையோ, அது போலத்தான் தற்போதைய மீனவர் பிரச்சனையும்.
இலங்கை கடற்படையால் இதுவரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதே எண்ணிக்கையில் இன்னொரு ஆதிக்க சாதியில் கொலைகள் விழுந்திருக்கும் என்றால் அதை திராவிட மனமோ, தமிழ்த் தேசிய மனமோ பொறுத்துக் கொண்டிருக்குமா என்பது இங்கு ஆராயப்பட வேண்டியது.
பொதுவாக மீனவச் சமூகத்தின் வீழ்ச்சிக்கு அவர்களின் குடிப்பழக்கமே காரணம் என்று பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. மீனவர்கள் தொழில் சார் வாழ்வைக் கொண்டிருப்பதால் நிரந்தரமான குடிகாரர்களாக இயல்பாகவே வாழ முடியாது. அப்படி வாழ்ந்தால் அவர்கள் கடலில் இருந்து அந்நியப்பட நேரிடும். மாறாக கள்ளுண்ணும் பழக்கமென்பது மீனவக் குடிகளிடம் சங்ககாலம் தொடங்கியே இருந்து வந்துள்ளது. மீனவ மக்கள் குடியால் சீரழிந்தவர்கள் என்கிற சிந்தனையை உருவாக்கியதும் கிறிஸ்தவம்தான். பின்னர் சுரண்டல் நலனுக்காகவும் அதைப் பேணி வளர்த்தெடுப்பதற்காகவும் இச்சிந்தனை சமவெளி சமூக ஆதிக்க சக்திகளால் கட்டி எழுப்பப்பட்டது. இப்படிப் பேசுகிற ஒருவர் கூட ‘குடி இல்லாமல் இருந்தால் மட்டும் மீனவன் வாழ்வு மேம்பட்டிருக்கும்’ என்றோ இலங்கை கடற்படை சுடாமல் விட்டிருப்பானா என்பதையோ கேட்கத் தவறுகின்றனர். நீடித்த சுரண்டல் அடக்குமுறைக்கு இத்தகைய வசைகளும் குற்றச்சாட்டுகளும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மீது சாத்தப்படுவது பொதுப்புத்திதான்.
கடற்கரை சமூகங்கள் மீதான இந்த ஒதுக்கல் முறைதான் தமிழகத்திலிருந்து மீனவர்களுக்கான அரசியல் அழுத்தம் ஒன்று உருவாகாமல் போகக் காரணமாக இருக்கிறது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் மீனவ மக்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை. இட ஒதுக்கீடு போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக ஏற்பாடுகளில் கூட இவர்கள் ஆதிக்க சாதி பிற்படுத்தப்பட்ட மக்களுடனேயே போட்டி போட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். நீண்டகாலமாக பாரம்பரிய மீனவர்கள் பழங்குடிகள் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்று வரை கண்டுகொள்ளப்படவில்லை. இத்தகைய புறச்சூழல்களைக் களைவதில் போதிய அக்கறை காட்டாததாலும் இடதுசாரி இயக்கங்கள் கூட இம்மக்களின் அரசியல் எழுச்சிக்கு அவர்களிடம் பணி செய்யாமல் இருப்பதும், கிறிஸ்தவம் இம்மக்களை தொடர்ந்து மூடுண்ட சமூகங்களாக வைத்து சுரண்டிக் கொண்டிருப்பதுமே அவர்களை தற்கொலையான ஒரு சமூகமாக வைத்துள்ளது. இந்தப் பிரச்சனைகளை பேசாதவரை, இது குறித்து சிந்திக்காதவரை, இலங்கைக் கடற்படையின் தூண்டிலில் சிக்கிய மீன்களாக இவர்கள் இரையாவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மீனவர்களுக்காக பேசுவதைப் போன்ற பாவனைக் கோஷங்களுக்கும் குறைவிருக்காது.
thanks
ஏண்டா ஜாதி பற்று இல்லாததால் இந்த நிலைமை சாணான் எங்க அடிமையா இருந்தவன்தான்
ReplyDelete